Sunday, February 7, 2010

ஏகாதசி நிறைவு பகுதி


" ஓம் நமோ நாராயணாய"
" ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே "

 
குருவாயூரும் ஏகாதஸியும்
ஸ்ரீ குருவாயூரப்பனின் ஸ்ரீ கோவிலில் நடைபெறும் திருவிழாக்களில் கார்த்திகை மாத சுக்ல பட்ச ஏகாதஸியை ஒட்டி நடத்தப்படும் உற்சவம் தனிச் சிறப்பு வாய்ந்தது. அன்றைய தினத்தில் காசி, பத்ரி, சபரிகிரி ஆகிய திருத்தலத்தங்களின் மஹிமையும், கங்கை, யமுனை முதலிய புண்ணிய நதிகளும் இங்கே ஒருங்கே கூடுவதாக ஐதீகம்.

திருப்பதியும் ஏகாதஸியும்
திருமலையில் உள்ள சுவாமி புஷ்கரணி மிகவும் விசேஷடமாய்க் கொண்டாடப்படுகிறது. மார்கழி மாத சுக்கில பட்ச துவாதசியில் சூரிய உதயத்தின் 6 நாழிகைக்குள் எல்லா தீர்த்தங்களும் சுவாமி புஷ்கரணியில் வந்து கலக்கின்றன. சுமார் மூன்று கோடி பவித்ர தீர்த்தங்கள் சங்கமிப்பதாக ஐதீகம். இப் புஷ்கரணியில் நீராடுபவர்களுக்குப் பாபம் நீங்கி தெய்வ சாந்நித்யம் உண்டாகிறதாம்.
விசேஷமான இத்தினத்தில் புஷ்கரணியில் நீராடி இறைவனைத் தொழுது, தான தருமங்கள் செய்பவர்கள் பாபங்கள் விலகி, துன்பம் அகன்று அஷ்ட ஐசுவரியங்களுடன் வைகுண்டப் பிராப்தியும் அடைவர்.

ஏகாதஸியும் சங்கர நாராயணரும்
முக்கடல் சங்கமிக்கும் குமரி மாவட்ட ஆலய விழாக்களில் மிகவும் சிறப்பு வாய்ந்தது "சிவாலய ஒட்டம்". பனிரெண்டு சிவாலய தரிசனத்தை, ஐம்பது மைல் தூரத்தை ஒடியே கடந்து தரிசிப்பர். "சிவாலய ஒட்டம்" ஆழ்ந்த சிவபக்தரும், மாமுனிவருமான புருடா மிருகத்திற்கு சிவனும் விஷ்ணுவும் ஒன்றே என உணர்த்தவும், பஞ்சபாண்டவர்களில் பீமனின் கர்வம் அடக்கவும் நடந்த திருவிளையாடல். நட்டாலத்தில் ஹரியும், ஹரனும் இணைந்து சங்கர நாராயணராய்த் தோன்றியதாக வரலாறு. அந்த சிவாலாய ஒட்டத்தில் பங்கு பெறுவர்கள் மாசி மாத ஏகாதஸி அன்றே விரதம் தொடங்குவர்.

இப்பேர்ப்பட்ட மிகச்சிறப்பான ஏகாதஸி விரதத்தை அவரவரால் இயன்ற அளவு கடைப்பிடித்து உயர்வு பெறுவோமாக !

வரும் நாட்களில் ஒவ்வொரு ஏகாதஸியின் பெயர், விரத கதை மற்றும் அவற்றின் பலன்கள் ஆகியவற்றை பார்ப்போம்.

No comments:

Post a Comment