Friday, February 5, 2010

ஏகாதசி பகுதி - II



முன்னுரை
ஏகாதசி பற்றிய விவரங்கள் அனைத்தும் பல்வேறு இதழ்கள், வலைத்தளங்கள் மற்றும் சமய வெளியீடுகளிலிருந்து தொகுக்கப்பட்டது.

கிரகங்களும், ஏகாதஸியும்
மனித உடலில் உள்ள உறுப்புகளின் மேல் குறிப்பிட்ட கிரஹங்களின் ஆதிக்கம் உள்ளன என சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ளது. சூரிய மின்சக்தி பத்து மடங்கு பூமியில் அதிகம் உள்ள நாள் தசமி. இந்த மின் (சக்தி) காந்த அலைகளால் மனித உடம்பில் ஆக்க சக்தியும், ஆன்ம சக்தியும் பெறப்படுவதாயும் சந்திர மின் காந்த அலைகளில் இருந்து மனித உடலுக்கு நீர் சக்தி கிடைப்பதாகவும் கூறப்படுகின்றது. சந்திர மின் சக்தி பூமியில் பத்து மடங்கு அதிகம் உள்ள நாளே "ஏகாதஸி" திதி நாள் ஆகும்.

பீமனால் "நிர்ஜல ஏகாதஸி" என நீர் கூட அருந்தாமல் கடைப்பிடிக்க முடிந்தது இதை முன்னிட்டு தானோ? (நிர்ஜல ஏகாதஸியைப் பற்றி பின்னால் பார்ப்போம்). இதுவன்றி சந்திரனின் ஆற்றல் மிகுந்த நாட்களில் ஜபம், தியானம் என செய்வது பலனுள்ள ஆக்க சக்தியாக மாறும்.

தசமி திதி அன்று குளித்து சுத்தமான உடையணிந்து பகலுணவு உண்டு, இரவு உபவாஸமிருத்தல் வேண்டும். மறுநாள் ஏகாதஸியில் குளித்து, சுத்த உடையணிந்து முழு உபவாஸமும், இறை சிந்தனையுடன் இருந்து, மறுநாள் துவாதசியன்று நியம நிஷ்டைகளை முடித்து அந்த திதி போவதற்கு முன்பே நேரத்துடன் பாரணை பண்ண வேண்டும்.

பாரணை தினங்களில் கத்திரிக்காய், புளி போன்றவற்றை உணவில் சேர்க்கக் கூடாது. எலுமிச்சை, அகத்திக்கீரை, சுண்டைவற்றல், நெல்லிக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அகத்திக்கீரை, சுண்டைவற்றல் போன்றவை நமது உடலில் சேர்ந்துள்ள வாயுவை அகற்றவும், எலுமிச்சை, நெல்லிக்காய் சக்திகளைத் தூண்டவும் பயன்படுகின்றன.

ஏகாதஸியில் அரிசிக்கு விடுதலை
ருக்மாங்கத ராஜாவின் காலத்தில் மக்களும், ஏகாதஸி விரதம் இருந்து உயர் கதி அடைந்ததால் பாப தேவதை " எங்கு போவது" எனத் தெரியாமல் பிரம்ம தேவரை அணுகிக் கேட்டபோது பிரம்மனும், "நீ போய் முழுதாக உள்ள அரிசியில் புகுந்து கொள்" என்றார். ஏகாதசியில் விரதத்தன்று முழுதாக அரிசியை யார் சாப்பிடுகிறார்களோ அவர்கள் பாபத்தை உண்பதாகக் கூறப்படுகிறது.

முழு உபவாஸமாய் இருக்க முடியாதவர்கள், வயதானவர்கள், நோயாளிகள், அவரவர் நிலைக்கேற்ப விரத முறையைப் பின்பற்றலாம். பகல் உறக்கம் இன்றி இந்தத் திதி நாட்களில் இருக்க வேண்டும். முழு உபவாஸம் இருக்க முடியாதவர்கள் அன்னத்தை பின்னம் பண்ணி உடைத்துக் கஞ்சியாக்கி சாப்பிடலாம். மாதத்தில் இருமுறை ஏகாதஸி வருகிறது. அதிலே சுக்ல பட்ச ஏகாதஸியாவது இருந்து அனுக்கிரஹத்தை சம்பாதித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்த பதிவில் " குருவாயூரும் ஏகாதஸியும் மற்றும் திருப்பதியும் ஏகாதஸியும் " காண்போம். அதுவரை
" ஓம் நமோ நாராயணாய"
" ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே, ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே "
 


No comments:

Post a Comment