Thursday, March 27, 2014

Ekadashi Vrat Katha – Papamochani Ekadashi - பாபமோசனி ஏகாதசி விரத கதை

Papamochani Ekadhasi
Papamochani Ekadhasi

The Ekādhaśī that occurs during the dark fortnight of the month Chaitra Maasa (March - April) is the Papamochani Ekadhasi.
  • All the influences of ghosts and demons will be completely nullified for one who fasts on this Papamochani Ekadhasi.
  • This Ekādhaśī also awards the eight perfections of life, fulfils all kinds of desires, purifies one’s life of all sinful reactions, and makes a person perfectly virtuous.
  • Whoever fasts on this sacred day becomes completely freed from having to take birth in any kind of devilish form. 
  • Sri Krishna has told - “Whoever reads or hears about Pāpamochanī Ekādhaśī obtains the very same merit he would get if he donated a thousand cows in charity, and he also nullifies the sinful reactions he may have incurred by killing a brāhmaṇa, killing an embryo through abortion, drinking liquor, or having sex with his guru’s wife. Such is the incalculable benefit of properly observing this holy day of Pāpamochanī Ekādhaśī”.
 Courtesy: http://madhwasaints.wordpress.com

ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹ‌ரே ஹரே

பாபமோசனி ஏகாதசி
(சித்திரை (சைத்ர) மாதம் - கிருஷ்ண பட்சம்)

மார்ச் மாதம், 27ம் தேதி, வியாழக்கிழமை, சித்திரை (சைத்ர) மாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பாபமோசனி ஏகாதசியாக ‌கொண்டாடுவர். பாபமோசனி ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம். 

அர்ஜூனன், பரமாத்மா கிருஷ்ணரிடம்," மதுசூதனா ! ஒவ்வொரு ஏகாதசி விரத மஹாத்மிய கதைகளைக் கேட்டு, மனம் ஆனந்தத்தால் உற்சாகம் அடைவதுடன் மற்ற ஏகாதசி மஹாத்மிய கதைகளையும் அறிந்து கொள்ள ஆவல் மேலிடுகிறது. 

ஸ்ரீ கிருஷ்ண கோபாலா!, தாங்கள் கிருபை புரிந்து சித்திரை (சைத்ர) மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசி விரத மஹாத்மியத்தை பற்றி கூற வேண்டுகிறேன். அந்த ஏகாதசி, எந்தப் பெயரால் அழைக்கப்படுகின்றது, அன்று எந்த தெய்வத்திற்கு பூஜை ஆராதனை செய்ய வேண்டும், விரதம் அனுஷ்டிப்பதற்கான விதிமுறை, இவற்றைப் பற்றி தாங்கள் கருணையுடன் விஸ்தாரமாக எடுத்துரைக்க வேண்டும்," என்று வேண்டி நின்றான்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜூனனின் வேண்டுகோளுக்கு இணங்கி," பாண்டு நந்தனா! ஒரு சமயம் ப்ருத்வியை (பூமி) ஆண்ட ராஜா மாந்தாதா, ரிஷி லோமசரிடம் இதே கேள்வியை கேட்டான்.  ராஜனின் கேள்விக்கு லோமச ரிஷி அளித்த பதிலை அப்படியே உனக்கு கூறுகிறேன். கேள்." என்று கூறி சொல்லத் துவங்கினார்.

தர்மத்தின் மறைபொருளை (உள்ளார்ந்த ரகசிய (गुह्यतम)) அறிந்த ஞானவானான மாந்தாதா, ரிஷி லோமசரிடம்," மஹரிஷி !, மனிதர்கள் தங்களது பாபத்திலிருந்து விமோசனம் பெற இயலுமா, முடியும் என்றால் எவ்விதம் அது சாத்தியமாகும். தயவுசெய்து மனிதர்கள் அனைவரும் எளிதில் தங்களது பாபங்களிலிருந்து விடுதலை பெற ஏதுவாக, ஏதேனும் சரளமான உபாயத்தை கூறி அருள வேண்டுகிறேன்." என்றான். 

அதற்கு லோமச ரிஷி," ராஜன், சைத்ர (சித்திரை) மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியானது, பாபமோசினி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.  இந்த ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் மனிதர்களின் சர்வ பாபங்களும் அழியப் பெறுவதுடன், நற்கதியும் கிட்டுகிறது. உனக்கு பாபமோசினி ஏகாதசி விரத மஹாத்மிய கதையைக் கூறுகிறேன். கவனமாக கேள்" என்றார். 

பழங்காலத்தில் 'சைத்ர ரத்' என்னும் பெயர் கொண்ட அழகிய வனம் ஒன்று இருந்தது. அது அப்ஸர சுந்தரிகள், கந்தர்வ கின்னரர் இவர்கள் கூடி ஆனந்தமாக பொழுதை கழிக்கும் இடமாக இருந்து வந்தது. அங்கு ஒவ்வொரு விநாடியும், வஸந்த கால கொண்டாட்டம் போல் கழிந்து வந்தது. அங்கு எக்கணமும் வித வித மலர்கள் பூத்து சொரிந்து கொண்டு இருந்தது. சில சமயம் கந்தர்வ  கன்னிகள், சில நேரங்களில் தேவேந்திரன் மற்ற தேவர்களுடன் அங்கு உல்லாசமாக கிரீடை புரியும் இடமாக அது அமைந்திருந்தது. இத்தனை உல்லாசக் கொண்டாங்கள் நடந்து வரும் இடமாக விளங்கினாலும், ரிஷி, முனிவர்கள் தவம் செய்யும் வனமாகவும் விளங்கியது. அப்பேர்ப்பட்ட வனத்தில் சிவபெருமானின் மீது மிகுந்த ப்ரேமையும், பக்தியும் கொண்ட மேதாவி என்னும் பெயர் கொண்ட ரிஷி ஒருவர் நெடுந்தவத்தில் ஆழ்ந்திருந்தார். 

வனத்திற்கு வரும் அநேக அப்சரஸ்கள், அவரைக் கண்டு, மோகம் கொண்டு மயக்க விரும்பினாலும், அவருடைய நெடுங்கால தவ வலிமை நெருப்பு வளையம் போல் அவரை யாரும் நெருங்க விடாமல் காத்து வந்தது.  மஞ்சுகோஷா என்னும் பெயர் கொண்ட அப்சரஸ் அவரை கண்டு மயங்கி மோகம் கொண்டாள். ஆனால், மற்ற அப்சரஸ்கள் போல் அவரருகில் சென்று விடாமல், அவர் தவத்தில் ஆழ்ந்திருந்த இடத்திலிருந்து சிறிது தூரத்தில் குடில் அமைத்து, தினமும் அவர் கண் பார்வை படும் இடமாக அமர்ந்து வீணை இசையுடன், தன் மதுரமான குரலில் கானம் பாடி அவரை மயக்கும் முயற்சியில் ஈடுபட்டாள். 

அதே நேரம் காமதேவனும், சிவபக்தரான ரிஷி மேதாவியின் தவத்தை வெற்றி கொள்ள இதுவே சரியான தருணம் என்று தன் முயற்சியை ஆரம்பித்தான். மஞ்சுகோஷா அப்சரஸின் புருவத்தை வில்லாகவும், மயக்கும் பார்வையை வில்லின் நாணாகவும், கண்களை கணைகளாகவும், மன்மத கணைகளால் தாக்கப்பட்ட ரிஷியின் இலக்காக அப்சரஸின் கனத்த ஸ்தனங்களையும் கொண்டு ரிஷியின் தவத்தை பங்கம் செய்ய தயார் ஆனான்.  அக்கால கட்டத்தில் ரிஷி மேதாவி வாலிப பருவத்தினராகவும், திடகாத்திர தேக ஆரோக்கியத்துடனும் விளங்கினார்.  பொன்னிற மேனியில் வெள்ளை நிற பூணூல் துலங்க‌,  முனிவர்களுக்கான தண்டத்தை கையில்  ஏந்தி, அவர் மற்றொரு மன்மதனைப் போல் விளங்கினார். 

அப்சரஸ் மஞ்சுகோஷாவின் மயக்கும் குரலில் பாடப்பட்ட  கானத்தின் இனிமை, அவள் அணிந்த அணிகலன்களில் பதிக்கப்பட்ட மணிகளின் ஒசை, வீணையின் இசைநயம் அனைத்தும் ஒரு சேர முனிவரை கவர்ந்தது. அவர் கண்களைத் திறந்து, எதிரே சற்று தூரத்தில் அமர்ந்து கானம் பாடிக் கொண்டிருந்த அப்சரஸ் மஞ்சுகோஷாவை கண்டார். அக்கணம் மன்மதன் தன் பாணங்களை விட, முனிவர்,மஞ்சுகோஷாவின் மீதான‌ மையலில் தன் நிலை மறந்து, கண் மூடாமல் அவள் அழகில் வியந்து நின்றார். அக்கணத்திற்காக இத்தனை காலம் காத்திருந்த அப்சரஸ் மெதுவாக மீட்டிக் கொண்டிருந்த வீணையை கீழே வைத்து விட்டு, முனிவரை நோக்கி அன்னம் போல் அடி மேல் அடி வைத்து நடந்து வந்தாள். மோகம் கொள்ள வைக்கும் கவர்ச்சியுடன் முனிவரை கொடியானது வலிமையான மரத்தை தழுவி படருவது போல், ஆலிங்கனம் செய்தாள். காண்பவர் மயங்கும் அவளது அழகிய தேக செளந்தர்யத்தில் மோகம் கொண்ட முனிவரும் அவளது ஆலிங்கனத்தில் சுய நினைவை இழந்து, தனது தவம், சிவபக்தி அனைத்தையும் மறந்து  மோகமயக்கத்தில் மஞ்சுகோஷாவுடன் காம கேளிக்கையில் ஆழ்ந்தார். (रमण) 

மன்மதனின் பிடியில் சிக்கிய முனிவர், பகல் - இரவு என்று நேரம் போவது அறியாமல் பல நாட்கள் மஞ்சுகோஷாவுடன் காதல் லீலையில் ஆழ்ந்திருந்தார். ஒரு நாள் மஞ்சுகோஷா முனிவரிடம், " முனிவரே, வெகு நாட்களாகி விட்டது. நான் ஸ்வர்க்கலோகம் செல்வதற்கு அனுமதி கொடுங்கள்." என்றாள்

மஞ்சுகோஷாவின் வார்த்தைகளைக் கேட்டு முனிவர்," சுந்தரி, சந்தியாகாலத்தில் தானே வந்தாய். அதற்குள் என்ன அவசரம். சூரிய உதயத்தில் செல்லலாம்." என்றார். முனிவரின் பதிலைக் கேட்டு மஞ்சுகோஷாவும்,  முனிவருடன்  சிற்றின்ப விளையாட்டில் ஆழ்ந்தாள். இப்படி இருவரும் நீண்ட நாட்கள், நேரம் போவது அறியாமல் காதல் விளையாட்டில் பொழுதைக் கழித்தனர்.

ஒரு நாள் மீண்டும்  மஞ்சுகோஷா முனிவரிடம்," தேவரீர், எனது இல்லம் இருக்கும் சொர்க்கலோகம் செல்ல அனுமதி அளிக்க வேண்டும்." என்று வேண்டினாள். அதற்கு முனிவர், " சுந்தரி, இன்னும் நேரம் ஆகவில்லை. அதற்குள் என்ன அவசரம். இன்னும் சற்று நேரம் பொறுத்திரு." என்றார்.

முனிவரின் பதிலைக் கேட்டு மஞ்சுகோஷா, " ரிஷியே, தங்களின் இரவு முடிவே இல்லாததாக இருக்கிறது. நாம் இருவரும் ஒன்றாக வாழ ஆரம்பித்து எத்தனை வருட காலம் ஆகிவிட்டது என்பதை நினைத்துப் பாருங்கள். அப்படி இருக்கையில், நான் இன்னும் என் இல்லத்திற்குச் செல்லாமல் தங்களுடன் இன்னும் அதிக நாள் இருப்பது உசிதமா என்பதை நீங்களே யோசித்து சொல்லுங்கள்." என்றாள். 

மஞ்சுகோஷாவின் "எத்தனை வருட காலம்" என்ற வார்த்தைகளைக் கேட்டு முனிவருக்கு காலத்தைப் பற்றி விழிப்புணர்வு உண்டாயிற்று. தான் எத்தனை வருட காலம் மஞ்சு கோஷாவுட‌ன் கழித்துள்ளோம் என்பதை சிந்தித்துப் பார்க்க ஆரம்பித்தார். அப்போது தான், அவருக்கு 'சிற்றின்பத்தில் தான்  57 வருடங்களை கழித்திருக்கிறோம்' என்னும் ஞானோதயம் உண்டாயிற்று. மஞ்சுகோஷா  அவருக்கு தன்னை அழிக்க வந்த காலனின் சொரூபமாக தோன்றினாள். அழகினால் தன்னை மயக்கி, தன் தவத்தைக் கலைத்து இத்தனை வருட காலம் சிற்றின்பத்தில் தன்னை ஆழ்த்திய  மஞ்சுகோஷாவின் மீது அவருக்கு அளவில்லா குரோதமும், கோபமும் உண்டாயிற்று.  உதடுகள் துடி துடிக்க, உடல் பலவீனத்தால் நடு நடுங்க, ஆக்ரோஷத்துடன் ," வஞ்சகி ! தவத்தை கலைத்த பாதகி, மஹாபாபி, துராசாரி,  நீ பிசாசினியாக கடவது" என்று சபித்தார்.

முனிவரின் சாபத்தால் பைசாசினி ஆக மாறிய மஞ்சுகோஷா மிகவும் வருத்ததுடன், "முனிவரே!, என் மீதுள்ள கோபத்தை விட்டுவிட்டு சாந்தமடையுங்கள். தயவுசெய்து இந்த சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்கான வழியை கூறி அருளுங்கள். சாதுக்களின் சத்சங்கம் நற்பலனை அளிக்கவல்லது என்று சான்றோர் கூறியுள்ளனர். நான் தங்களுடன் பல ஆண்டுகள் கழித்துள்ளேன். ஆகையால் குரோதத்தை விட்டொழித்து கருணையுடன் எனக்கு நல்வழி காட்டுங்கள். இல்லையெனில் மஞ்சுகோஷா முனிவர் மேதாவியுடன் பல ஆண்டு காலம் வாழ்ந்தும் நற்பலன் ஏதும் கிட்டாது பைசாசினியாக மாறினாள் என்ற அவப்பெயர் தான் மிஞ்சும்" என்று வேண்டினாள்.

மஞ்சுகோஷாவின் வார்த்தைகளைக் கேட்ட முனிவரும் சாந்தத்துடன் சிந்திக்கலானார். இதனால் தனக்கு ஏற்படப் போகும் அபகீர்த்தியைப் பற்றிய பயமும் உண்டாயிற்று. இறுதியில் மஞ்சுகோஷாவிடம்," நீ இழைத்த தீங்கு மன்னிக்க முடியாதது. இருந்தாலும் என் சாபத்திலிருந்து விமோசனம் பெறுவதற்கான வழியை கூறுகிறேன். கேள். சித்திரை (சைத்ர) மாதம் கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதி பாப விமோசனி ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது. அன்று விரத விதிமுறைப்படி உபவாசத்துடன் விரதம் அனுஷ்டித்தால் நீ சாபத்திலிருந்து விடுதலை பெறலாம்." என்றார். பிறகு மஞ்சுகோஷாவிற்கு விரத விதிமுறைகளையும், அவற்றை எப்படி அனுஷ்டிப்பது என்பதனையும் எடுத்துரைத்தார்.

பிறகு தன் தவறுக்கான பிராயச்சித்தம் தேடி தன் தந்தை ச்யவன ரிஷியின் ஆசிரமத்திற்கு சென்று தந்தையின் முன் நின்றார். மகன் மேதாவியைக் கண்ட ச்யவன முனிவர் அவரிடம், "மகனே, உனக்கு என்னவாயிற்று? தவத்தின் பலன் எல்லாம் அழிந்ததுடன், பிரம்மனுக்கு நிகரான உன் தேஜஸ்ஸூம் இழந்து காணப்படுகிறாயே?" என்று வினவினார்.

வெட்கத்தால் தலைகுனிந்து நின்ற மேதாவி முனிவர், " தந்தையே ! நான் ஒரு அப்சரஸின் அழகில் மயங்கி அவளுடன் சிற்றின்பத்தில் 57 ஆண்டுகளை இழந்து மஹா பாபம் புரிந்துள்ளேன். அதன் காரணமாக என் தவ வலிமை, தேஜஸ் அனைத்தையும் இழந்து நிற்கிறேன். தாங்கள் தான் கருணை கூர்ந்து இந்த மஹா பாபத்திலிருந்து முக்தி பெறுவதற்கான உபாயத்தை கூற வேண்டும்." என்றார்.

இதைக் கேட்ட ச்யவன ரிஷி,"  மைந்தனே, மேதாவி ! நீ சித்திரை (சைத்ர) மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் பாபவிமோசனி ஏகாதசி விரதத்தை பக்தி சிரத்தையுடன் விதிப்பூர்வமாக உபவாசம் இருந்து அனுஷ்டித்தால் உன்னுடைய சகல பாபங்களும் அழிந்து மேன்மை பெறுவாய்." என்றார்.

தந்தையின் வார்த்தைக்கு ஏற்ப, மேதாவி முனிவரும் பாபவிமோசனி ஏகாதசி நாளன்று விதிபூர்வமாக, உபவாசத்துடன் விரதத்தை அனுஷ்டித்தார். பாபவிமோசனி ஏகாதசி விரத பிரபாவத்தால் அவரின் அனைத்து பாபங்களும் அழிந்து, தான் இழந்த அனைத்தையும் பெற்றார். மஞ்சுகோஷாவும் மேதாவி முனிவர் அருளியபடி பாபவிமோசனி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, அதன் புண்ணிய பலனால் பைசாச ரூபத்திலிருந்து விடுதலை பெற்று, அழகிய ரூபத்துடன்  சொர்க்கலோகம் சென்றாள்.

லோமச ரிஷி, ராஜனிடம், " ஹே ராஜன்!, பாபவிமோசனி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன. பாபவிமோசனி ஏகாதசி விரத மஹாத்மியத்தை படிப்பதாலும் அல்லது கேட்பதாலும் ஒராயிரம் பசுக்களை (கோ) தானம் செய்த புண்ணியபலன் கிட்டுகிறது. இவ்விரதத்தை விதிபூர்வத்துடன் அனுஷ்டிப்பதால் பிரம்மஹத்தி (பிராம்மணனை கொன்ற பாவம்), தங்கம் திருடுவதால் உண்டாகும் பாபம், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் பாபம், அகம்பாவத்துடன் நடப்பதால் உண்டாகும் பாபம் போன்ற கொடிய பாபங்கள் அழியப் பெறுவதுடன் இறுதியில் மோட்சப்பிராப்தியும் கிட்டுகிறது," என்றார்.

கதாசாரம்
இக்கதையிலிருந்து (ஸ்பஷ்டமாக) தெளிவாக தெரிவது என்னவென்றால் உடல் அழகு நிலையானது அல்ல. அப்படி இருக்க,  தேக செளந்தர்யத்தின் மீது ஏற்பட்ட மையல், மேதாவி முனிவரை, தவசங்கல்பத்தை மறக்கச் செய்யும் கொடிய பாவத்தை செய்ய வைத்தது. ஆனால் கருணாமயமான பகவான் மஹாவிஷ்ணுவின் பாபவிமோசனி சக்தி இத்தகைய கொடிய பாவத்திலிருந்தும் அவருக்கு விடுதலை அளித்து காத்து அருளியது. எவர் ஒருவர் நற்பணி (சத்கர்மா) செய்வதாக சங்கல்பம் செய்து கொண்டு, பிறகு பேராசை, மோகம் போன்ற தீய சக்திகளின் வசப்பட்டு தன் சங்கல்பத்தை மறக்கிறாரோ, அவர் கொடிய நரகத்தில் தண்டனை பெறுவதற்கு தகுதி உடையவராகிறார். ஆனால் பாபவிமோசனி ஏகாதசி விரதம் சகல பாவங்களிலிருந்தும் மனிதர்களுக்கு விடுதலை அளிப்பதுடன், இறுதியில் ஸ்வர்க்கப் பிராப்தியையும் அளிக்கிறது.

ஓம் நமோ பகவதே வாசுதேவாய….வாசுதேவாய நமோ நம
தொடர்புடைய  ஏகாதசி பதிவுகள்
ஏகாதசி விரத கதை -
  ஆமலாகீ  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -  விஜயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  ஜெயா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  சட்-திலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  புத்ரதா  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  சஃபால  ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்
ஏகாதசி விரத கதை -
  மோக்ஷ்தா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  உத்பன்னா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ப்ரபோதினி ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  ரமா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பாபங்குச ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  இந்திரா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பார்ஷ்வா – வாமன ஏகாதசி - காண இங்கு
சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
 அஜா – அன்னதா ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  பவித்ரோபன (புத்ரதா) ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை -
  காமிகா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - தேவசயனி (பத்ம) ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - யோகினி
  ஏகாதசி – காண இங்கு சொடுக்கவும்.
ஏகாதசி விரத கதை - நிர்ஜலா ஏகாதசி - காண இங்கு சொடுக்கவும்.
அஸ்வமேத யாக பலன் தரும் ஏகாதசி விரதம் பகுதி 1 - காண இங்கு சொடுக்கவும்.
கிரகங்களும் ஏகாதசியும், ஏகாதசி விரதம் பகுதி 2 - காண இங்கு சொடுக்கவும்.
குருவாயூரும் ஏகாதசியும், திருப்பதியும் ஏகாதசியும்,
 ஏகாதசியும் சங்கர
நாராயணரும் ஏகாதசி நிறைவு பகுதி- காண இங்கு சொடுக்கவும்.

No comments:

Post a Comment